புதன், 12 ஜனவரி, 2011

எல்லா பொதுக் குழுக்களிலும் சிறந்தது திருப்பத்தூர் பொதுக்குழுவே! தமிழர் தலைவர் பாராட்டு!

திருப்பத்தூர் (வேலூர்) பொதுக்குழு - இதுவரை நடைபெற்றவற்றிலேயே சிறந்தது என்று திராவிடர் கழகத் தலைவர் பாராட்டியதற்குப் பிறகு - வேறு பேச்சுக்கே இடமில்லை.
பொதுக் குழுவைத் தொடர்ந்து மாலை மண்டல - திராவிடர் எழுச்சி மாநாடு என்றவுடன், மாவட்டக் கழகத் தலைவர் இளைஞர் கே.சி. எழிலரசன் பந்தயக் குதிரையாகப் புறப்பட்டு விட்டார். இளைஞர் பட்டாளம் ஒன்று அவருக்குத் துணை நின்றது.

நீதிக்கட்சி காலந்தொட்டு....
நீதிக்கட்சி காலந்தொட்டு வ.ஆ. திருப்பத்தூருக்கு ஒரு வரலாறு உண்டு. எத்தனை எத்தனையோ மாநாடு-களையும், சிறப்பு நிகழ்ச்சிகளையும் நடத்திக் காட்டிய பெருமை இவ்வூருக்கு உண்டு என்றாலும், நேற்றைய நாள் (23.10.2010) என்பது முத்திரை பொறித்த நாளாகி விட்டது.
வாணியம்பாடி முதல் திருப்பத்தூர் வரை கழகக் கொடிகளின் அணிவகுப்பு!
வாணியம்பாடியிலிருந்து, திருப்பத்-தூர் வரை 20 கிலோ மீட்டர் தூரத்திற்குச் சாலையின் இரு மருங்கிலும் திராவிடர் கழகக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. 5 அடிக்கு ஒரு கொடி வீதம் காண்போரை நிற்க வைத்தது - சிந்திக்க வைத்தது. தந்தைபெரியார் மறைந் தாலும், அன்னை மணியம்மையார் மறைந்தாலும் பெரியார் போட்ட வித்து வளர்ந்து மரமாகிக் கனிகளைக் கொடுத் துக் கொண்டிருக்கிறது என்ற எண் ணத்தை இந்தக் காட்சிகள் காண் போரிடம் உருவாக்கின.
ஜோலார்பேட்டையிலிருந்து திருப்பத்தூர் வரை...
ஜோலார்பேட்டையிலிருந்து திருப்பத்தூர் வரை நூற்றுக்கணக்கான மாநாட்டு விளம்பரப் பிளக்சுகள் - தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் வீரமணி ஆகியோர் உருவந் தாங்கிய அந்தப் பதாகைகள் திருப்பத்தூரில் நடக்கப் போவது மண்டல மாநாடா? மாநில மாநாடா? என்று காண்போரைக் கேட்க வைத்தது.
சுவர் எல்லாம் மாநாட்டைப் பறைசாற்றும் எழுத்துகள். திருப்பத்தூர் மட்டுமல்ல; சுற்றியுள்ள மத்தூர், ஊற்றங் கரை உள்ளிட்ட பகுதிகளில் எல்லாம் விளம்பரப் பதாகைகள், 100 ஆட்டோக் களின் பின்பக்கத்தில் மாநாட்டு விளம்பரச் சுவரொட்டிகள்.
விளம்பர மயம்!
கலைஞர் தொலைக்காட்சி விளம்பரம் மட்டுமல்ல; திருப்பத்தூரிலும் சுற்றுப் பகுதிகளிலும் உள்ளூர்த் தொலைக் காட்சிகளில் எல்லாம் விளம்பரம்! விளம்பரம்!! விளம்பரம்!!!
திருப்பத்தூரில் எங்கு பார்த்தாலும் திராவிடர் கழகக் காகிதக் கொடிகள் - ஊருக்கே குடைபிடித்து விட்டன. சுருக்கமாகச் சொன்னால் திருப்பத்தூர் ஓர் அழகிய எழிற்கோலத்தில் கண்ணுக்கு விருந்தாகக் காட்சி அளித்தது. ஸ்கைலாப்
1979 ஜூலை 10,11 ஆகிய நாள்களில் இவ்வூரில் தந்தை பெரியார் நூற்றாண்டு விழா வெகு சிறப்புடன் நடத்தப்பட்டது. மறைந்தும் மறையாலும் நமது நெஞ்சில் சிரிக்கும் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் ஏ.டி. கோபால் அவர்கள் முன்னின்று அவ்விழாவை நடத்தினார்.
மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த கே.கே. சின்னராசு வரவேற்புரை யாற்றினார். அந்தச் சுயமரியாதைச் சுடரொளியின் அருமை மைந்தர்தான் - இன்றைய திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், திராவிடர் எழுச்சி மாநாட்டின் தலைவருமான கே.சி. எழிலரசன் ஆவார். அந்த விழாவிலே பங்கும், பணியும் ஆற்றிய ஏ.டி. கோபால் கே.கே. சின்னராசு, வடசேரி து. ஜெகதீசன் ஆகியோர் சுயம ரியாதைச் சுடரொளிகள் ஆகிவிட்டனர். அவ்விழாவையொட்டி நடைபெற்ற பேரணிக்குத் தலைமை வகித்த செய்யாறு வேல். சோமசுந்தரம், 85 வயதையும் தாண்டி இதோ நம்முன் இந்த மாநாட் டில், உடல் தளர்ந்தாலும் உள்ளந் தள ராத தளகர்த்தராகக் காட்சி அளிக்கிறார்.
செய்யாறு பா. அருணாசலம் அவர் களும் 85 வயதிலும் அதே வாலிப உணர் வோடு இந்த மாநாட்டிலே! (அடுத்த தலைமுறைக்கு தன்மகன் மானமிகு இளங்கோவனைக் கழகத்திற்குத் தந்தருளியுள்ளார்)
இவையெல்லாம் மலரும் நிகழ்வுகள்! அய்யா நூற்றாண்டு விழாவினை உச்ச நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் திரு. ஏ. வரத ராசன் தொடங்கி வைத்து உரையாற் றினார்.
இதில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி ஒன்று உண்டு. இரண்டாம் நாள் நிகழ்ச்சி (11.7.1979) சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தும் நடக்கவில்லை. காரணம் என்ன தெரியுமா?
அமெரிக்கா ஏவிய ஸ்கைலாப் பூமியில் விழப் போகிறது என்ற பீதி - ஏடுகளில் பிரச்சாரம்! இவ்வளவு ஏற்பாடு கள் செய்தும் பொது மக்கள் வர அஞ் சினால் என்ன செய்வது என்ற எண்ணத் தில் விழா ஏற்பாட்டாளர்கள் ஒரு வாரம் ஒத்தி வைத்து ஜன 18இல் கோலாகல மாகக் கொண்டாடினார்கள்.
அந்தத் திருப்பத்தூரில்தான் திருப்பம் தரும் இரு நிகழ்ச்சிகள் - அன்று பூத்த மலர்த் தோட்டம் போல் நேற்றைய நிகழ்ச்சிகள் மலர்ந்து மணம் வீசின. (23.10.2010).
காலை 5.30 மணிக்கு சென்னையி லிருந்து சாலை வழியாக வந்து சேர்ந்த தமிழர் தலைவருக்கு காலை 9 மணி அளவில் சோலையார்பேட்டையில் மிகப் பெரிய அளவில் தமிழர் தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து திருப்பத்தூர் வரை வாகனங்கள் அணி வகுக்க தமிழர்தலைவர் சிறப்பாக அழைத்து வரப்பட்டார். போக்குவரத்தே ஸ்தம்பித்தது. பொது மக்கள் ஆச்சரியத் தோடு கருஞ்சட்டைகளின் அணிவகுப் பைப் பார்த்தனர்.
அங்கிருந்து மாவட்டக் கழகத் தலை வர் கே.சி. எழிலரசன் இல்லத்திற்குத் தமிழர் தலைவர் வருகை தந்தார். கொடி ஏற்றினார் கழகத் தலைவர்
10.30 மணிக்கு புறப்பட்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அருகில் கழகக் கொடியை ஏற்றினார். 10.50 மணிக்குப் பொதுக்குழு நடைபெறும் ஜி.பி. மகா லுக்கு வானகங்கள் புடை சூழ திராவிடர் கழகத் தலைவர் வந்து சேர்ந்தார்.
கழகத் தோழர்களின் ஒலி முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. மண்டபத்தில் நுழைந்த கழகத் தலைவர் கழகத் தோழர் களை - குறிப்பாக முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர்களை தனித்தனியே சந்தித்து நலம் விசாரித்தார். கனத்த இதயத்தோடு...
பொதுக்குழு தொடங்கியது
பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அண்ணா சரவணன் கடவுள் மறுப்புக் கூறினார். இவ்வளவு மகிழ்ச்சி ஒரு பக்கம் நிரம்பி வழிந்தாலும் கழகத் தலைவரும், தோழர் களும் கனத்த மனத்தோடு இறுகிக் காணப்பட்டனர்.
நமது அன்புக்குரியவரும், கழகத்தின் கருத்துக் கருவூலமுமான பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் அவர்களின் திடீர் மறைவு அனை வர் உள்ளத்தையும் குடைந்தெடுத்துக் கொண்டிருந்தது. உள்ளங்கள் துன்பச் சேற்றில் அழுந்திக் கொண்டிருந்தன.
அவருடைய உருவப் படத்தினை கழகத் தலைவர் திறந்து வைத்தபோது அனைவரின் கண்களும் குளமாயின.
ஆசான் மறைவு குறித்து கழகத் தலைவர் வெளியிட்டிருந்த அறிக்கை யினை திராவிடர் கழகப் பொதுச் செய லாளர் கலி. பூங்குன்றன் படித்தார். மறை வடைந்த சூழலை எடுத்துக் கூறினார்.
அனைவரும் இரு மணித்துளிகள் எழுந்து நின்று அமைதி காத்தனர் - வீர வணக்கம் செலுத்தினர்.
வேலூர் மண்டல செயலாளர் ஆசிரி யர் பழ. வெங்கடாசலம் முன்மொழிய வும், திருப்பத்தூர் மாவட்ட கழகச் செயலாளர் மகேந்திரன் வழிமொழிய வும், செயலவைத் தலைவர் ராசகிரி கோ. தங்கராசு பொதுக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.
கே.சி. எழிலரசன் வரவேற்புரை
திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி. எழிலரசன் வரவேற்புரை ஆற்றினர். எங்கள் மீது நம்பிக்கை வைத்து, பொதுக் குழுவையும், மாநாட்டையும் நடத்திட வாய்ப்பளித்த தமிழர் தலைவருக்கு நன்றி கூறினார். கழகத்தை நோக்கி ஏராள இளைஞர்கள் வந்து கொண்டு இருப்பதைப் பெரு மிதத்துடன் குறிப்பிட்டார்.
தொடக்கவுரை திராவிடர் கழகப் பொதுச் செயலா ளர் கலி. பூங்குன்றன் கடந்த பொதுக்குழு கூட்டத்திற்கும் இக் கூட்டத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் கழகம் மேற் கொண்ட பணிகளை விளக்கிக் கூறினார்.
தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் கடந்த கால கட்டத்தில் கழகத்தின் செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார். 45 லட்சம் மாணவர்கள் இலக்கு இல்லாமல் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் 10 விழுக்காடு என்று எடுத்துக் கொண்டாலும்கூட நாலரை லட்சம் மாணவர்கள் மத்தியில் கழகக் கருத்துகளை எடுத்துச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. அதற்கான திட்டங்களை வகுத்துச் செயல்பட வேண்டும் என்றார்.
தீர்மானங்கள்
கழகத் துணைப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் 15 தீர்மானங்களை முன்மொழிந்தார். முதல் தீர்மானம் இரங்கல் தீர்மானம். அனை வரும் எழுந்து நின்று அமைதி காத்தனர். மீதி 14 தீர்மானங்களையும் வழி மொழி கிற வகையில் பலத்த கரவொலி எழுப் பினர்.
தொடர்ந்து தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழநி. புள்ளையண்ணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. பார்வதி, கழக மகளிர் பாசறை அமைப் பாளர் கலைவாணி, பொதுக்குழு உறுப் பினர் ஏ.பி.ஜே. மனேரஞ்சிதம், மாநில மாணவரணி செயலாளர் ரஞ்சித்குமார், மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் வா. நேரு, மண்டல தலைவர்கள் சார்பில் பொத்தனூர் க. சண்முகம், மண்டல செயலாளர்கள் சார்பில் பால். ராசேந்திரம் மாவட்ட கழகத் தலைவர்கள் சார்பில் தஞ்சை வழக்குரைஞர் அமர்சிங், மாவட்ட கழக செயலாளர்கள் லால்குடி ப. ஆல்பர்ட், வழக்குரைஞர் சக்திவேல், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள் மொழி, திராவிடர் கழக பொதுச் செய லாளர் சு. அறிவுக்கரசு, கழகப் பொரு ளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை ஆகியோர் உரையாற்றினர்.
தமிழர் தலைவர் உரை
நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினர். அவர் தன் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
ஒரு இளைஞரை நம்பி பொதுக் குழுவையும் மாநாட்டையும் ஒப்படைத் தோம்; அது வீண் போகவில்லை; வெற் றியைக் கொடுத்தது (பலத்த கரவொலி) எழிலரசன் தலைமையில் இளைஞர்கள் நிறைந்த ஒரு டீம் எல்லாவற்றையும் வெகு சிறப்பாகச் செய்து முடித்துள்ளது.
இதுவரை நடந்த பொதுக்குழுக் கூட்டங்களிலேயே இதுதான் முதல் பரிசைத் தட்டிச் சென்றிருக்கிறது (பலத்த கைதட்டல்). உரத்தநாட்டை இது விஞ்சியது என்றால், திருப்பத்தூரை நாங்கள் விஞ்சு வோம் என்று திருப்பூர்த் தோழர்கள் சவால் விட்டுள்ளனர். இந்தப் போட்டி வாழ்க, வளர்க - இத்தகைய ஆரோக்கியப் போட்டி கள் தான் நமக்குத் தேவை!
பெரியவர்களுக்கும், இளைஞர்களுக் கும் ஒரு பக்கத்தில் போட்டி, மகளிரிடம் இந்த வாய்ப்பைக் கொடுத்தால் இதைவிட சிறப்பாகச் செய்து முடித்து விடுவார்கள். அவர்களிடம் ஒப்படைக்கப் பட்ட பணி கள் எல்லாம் சிறப்பாகவே நிறைவேற்றப் பட்டுள்ளன. பிரச்சினை என்னவென்றால் அவ்வளவு எளிதாக ஆண்கள் அவர்களி டம் ஒப்படைத்து விட மாட்டார்கள் (பலத்த கரவொலி)
மற்றவர்கள் எண்ணிக்கையில் கோடிக்கணக்கில் இருக்கலாம்; நாம் எண்ணிக் கையில் நூற்றுக்கணக்கில் இருக்கலாம். ஆனாலும் நாம் பலவான் களாக இருப்ப தற்குக் காரணம் - நம்மிடம் இருக்கும் இலட்சியப் பல மாகும். இதுதான் வெற்றி பெறும். வரும் காலம் என்பது பெரியா ருக்கு உரியது. இனிவரும் உலகம் என்று சொன்னால் அது பெரியார் உலகம்தான்!
இளைஞர்களின் சகவாசத்தை பெரி யார் விரும்பினார். இளைஞர்களோடு இருப்பதால் இளைஞராக இருப்பதாக வும் கூறினார். எனவே, நம் கழகத் தோழர்கள் இளைஞர்களைத் தட்டிக் கொடுக்க வேண்டும். இளைஞர்களை ஓடிப் பிடியுங்கள்.
மகளிரை ஊக்கப்படுத்துவீர்!
கழகத் தோழர்களே! மகளிரை ஊக்கப்படுத்துங்கள். வாழ்விணையரோடு இணங்கி, ஒத்து வாழுங்கள்; நண்பராகப் பழகுங்கள்; நல்ல விளைவுகள் ஏற்படும்.
பெரியார் வாழ்வியல் மய்யம்
ஊருக்கு ஊர் பெரியார் வாழ்வியல் மய்யங்கள் தொடங்கப்பட வேண்டும். நம் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளை நாமே தீர்க்க முடியும். நம் இளைஞர்கள் பெரும்பாலும் ஒரு பக்கம் போதைகளுக்கு அடிமையாகிறார்கள். இன்னொரு பக்கம் கோழைகளாகிறார்கள். தாத்தா கண்டித் தார், ஆசிரியர் திட்டினார், தேர்வில் தோல்வி, அல்லது குறைந்த மதிப்பெண் என்பதால் தற்கொலைகள் செய்துகொள் கிறார்கள். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தோல்வியைச் சந்திக்கும், எதிர் கொள்ளும் சக்தி அவசியம் தேவையாகும். இந்த மய்யம் இதற்காகப் பயன்படும்.
வீர விளையாட்டுக் கழகம்
பெரியார் வீர விளையாட்டுக் கழகம் ஊருக்கு ஊர் தொடங்கப்பட வேண்டும், உடல் வளம், உள்ளம் நலம் இரண்டும் தேவை. மாணவர்களை இந்த வகையில் திசை திருப்ப வேண்டும். இதே திருப்பத் தூரில் இந்த ஆண்டு அகில இந்திய சடுகுடு போட்டி வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. எழிலரசன் சிறப்பாக முயற்சி எடுத்து வெற்றியாக்கிக் கொடுத்தார் வரும் சனவரி 20 முதல் 23 முடிய காரைக்குடியில் அகில இந்திய சடுகுடி போட்டி பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் என்றார் தமிழர் தலைவர். மாவட்டத்துக்கு 5 முதல் 10 பேர் வரை பெரியார் சமூகக் காப்பு அணிக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் துணைச் செயலாளர் எம்.கே.எஸ். இளங்கோவன் நன்றி கூறினார். 11 மணிக்குத் தொடங்கிய பொதுக்குழு பிற்பகல் 3.15 மணிக்கு நிறைவுற்றது. அனைவருக்கும் சிறப்பாக மதிய உணவு விருந்தளித்து உபசரிக்கப்பட்டது.
பொதுக் குழுவில் அறிவிப்பு
சேலம் மாவட்ட துணைச் செயலாளர் மானமிகு கமலம் மாதேஸ்வரன்
திருவள்ளூர் மாவட்டம்
பொதுக் குழு உறுப்பினர்கள்: 1) வழக்கறிஞர் மா. மணி (மாவட்ட துணைத் தலைவர்).
2) சு. விமல்ராசு (திருவள்ளூர் நகர தலைவர்)
3) ச. இரமணி (மாவட்ட மகளிரணி) மாணவரணி: மாவட்ட மாணவரணி தலைவர்: ச. சந்தோசு; மாவட்ட மாணவரணி செயலாளர்: குணாளன்; மாவட்ட அமைப்பாளர்: நடராசன்;
தீபாவளி துண்டறிக்கை வாங்கியோர்:
கடலூர் மாவட்டம் - 10,000; சிதம்பரம் மாவட்டம் - 10,000; புதுவை மாவட்டம் - 10,000; செய்யாறு - 5000; அரக்கோணம் - 5000; திண்டிவனம் - 5000; திருப்பத்தூர் - 5000; அரியலூர் - 10,000; முன்பணம் கொடுத்து பதிவு செய்தோர்: கிருஷ்ணகிரி - 5000; கல்லக்குறிச்சி - 5000; குமரி மாவட்டம் கிருஷ்ணவேணி - 4000; திண்டுக்கல் - 5000.

அய்யா நினைவு நாளில் வினாடி வினா போட்டி
இவ்வாண்டு தந்தை பெரியார் பிறந்த நாளை யொட்டி பெரியாரால் வாழ்கிறோம் என்ற தலைப்பில் கழகத்தின் சார்பில் இருபால் மாணவர்களிடையே நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி நல்ல பலனைக் கொடுத் துள்ளது.
சென்னையில், அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் ஊழியர்கள் நலச் சங்கங்களின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் தோழர் கோ. கருணாநிதி அவர்களின் முயற்சியால் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கல்லூரி மாணவர்கள் மத்தியிலே பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தமிழில் மட்டுமல்ல; ஆங்கிலத்திலும் நடத்தியுள்ளனர்.
மண்டைச் சுரப்பை உலகு தொழும்! - என்பது தமிழுக்கான போட்டி; ஞநசலையச ளுடிஉயைட சுநகடிசஅநச சுநஎடிடரவடியேசல என்பது ஆங்கில பேச்சுப் போட்டிக் கான தலைப்பு.
22.10.2010 அன்று மாலை பெரியார் திடலில் அந்த அமைப்பின் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர், மாணவியர்க்குப் பரிசுகள் அளிக்கப்பட்டன.
முதல் பரிசு பெற்றவர்கள் மேடையில் பேசினர். அந்தப் பேச்சுகளைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போனேன். முசுலிம் பெண் கள் எல்லாம் கலந்து கொண்டிருக் கின்றனர். கண் பார்வையற்ற - ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவி ஆங்கிலத்தில் பேசிய பேச்சு அனைவரையும் வியக்கச் செய்தது - அப்படி ஒரு பேச்சு!
பெரியார், காலத்தைக் கடந்து தலை முறைகளைக் கடந்து வெல்லுவார் என்ப தற்குச் சாட்சியாக அது அமைந்திருந்தது.
தந்தை பெரியார் நினைவு நாளை யொட்டி (வரும் டிசம்பர் 24) வினாடி வினா போட்டி நடத்தப்படும். பெரியார் ஆயிரம் வினாக்கள் விடைகள் என்ற நூலை கழகம் வெளியிட்டுள்ளது. அதிலிருந்து வினாக் கள் கேட்கப்படும். முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.40 ஆயிரம். 3 ஆம் பரிசு ரூ.25 ஆயிரம் மற்றும் ஆறுதல் பரிசுகள் உண்டு. முன்கூட்டியே திட்டமிட்டு இதனைச் செயல்படுத்துவோம்.
(- திருப்பத்தூர் கழகப் பொதுக் குழுவில் கழகத் தலைவர் உரையிலிருந்து 23.10.2010)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக