புதன், 3 ஆகஸ்ட், 2016

இதயங்களை கொள்ளையடித்த இருபத்தி அய்ந்தாம் ஆண்டு மணவிழா !

ஜூலை 1௦ !  ஞாயிற்றுகிழமை காலைபொழுது மூடிய வானத்தில் முகம் காட்ட துடித்தது சூரியன், சில்லென வீசியது தென்றல், ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தேன் கே.சி எழிலரசன் -அகிலா வாழ்விணையர்களின் 25 ஆம் ஆண்டு மண நாள் விழாவை கொண்டாட அவர்களின் செல்வர்கள் பொறியாளர் எ.சிற்றரசுவும் ,மருத்துவர் மங்கையர்க்கரசியும் விடுத்த அன்பான அழைப்பினை ஏற்று குடும்பத்துடன் பயணித்து கொண்டிருந்தேன்
தலைமுறை தலைமுறையாய் தலைவரின் வழியில் 
                                தந்தை பெரியார் கொள்கைக்குடும்பத்தின் இரண்டாம் தலைமுறையை சார்ந்தவர் கே.சி எழிலரசன் அவர்கள். திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினராகவும் ஆப்பிரிக்க பெரியார் பவுண்டேசன் நிறுவனராகவும் பொறுப்பு வகிப்பவர் ,ரோட்டரி ,காமராஜர் நூற்றாண்டு விழா அறக்கட்டளை ,உள்ளிட்ட ஏராளாமான மனிதநேய பணிகளால் அறியப்பட்டவர் .அவரது துணைவியார் அகிலா அவர்கள் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக தலைவராகவும் திராவிடர் மகளிர் பாசறையின் மாநில பொருளாளராகவும் பொறுப்பு வகிப்பவர். எழிலரசன் அவர்களின் குடும்பத்துடன் உடனான நட்பு தலைமுறைகளை தாண்டிய நட்பு .பெரும்பாலுமான அவரது இல்ல விழாக்களில் எங்கள் குடும்பம் பங்கேற்றுள்ளது ,அவ்வாறே எங்கள் இல்ல விழாக்களில் அவரது குடும்பம் பங்கேற்றுள்ளது

புரட்சிகவிஞர் நல்லதொரு குடும்பம் –ஒரு பல்கலைக்கழகம் என்று பாடியதை போன்று எழிலரசனின் குடும்பம் அன்பும் காதலும் நிறைந்த அழகான குடும்பம் .எழிலரசன் அகிலா வாழ்விணையர்களை காணும் போதெல்லாம்

புரட்சிக்கவிஞர் பாடிய நல்லதொரு குடும்பம் 
அன்பால் அவளும்
அவனும் ஒருமித்தால்
து ன்பமவ ளுக்கென்னில்
துன்புறுவான்-துன்பம்
அவனுக்கெனில் அவளும்
அவ்வாறே; இந்தச்
சுவைமிக்க வாழ்வைத்தான்
தூயோர்-நவையற்ற
காதல்வாழ் வென்று
கழறினார்; அக்காதல்
சாதல் வரைக்கும்
தழைத்தோங்கும் என்கிற பாடல் வரிகள் நினைவுக்கு வரும் .தங்கள் வாழ்க்கை முறையால் பலருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்பவர்கள் .இவர்களின் காதல் வாழ்வில் கனிந்த இரு செல்வங்கள் தான் சிற்றரசுவும் ,மங்கையர்க்கரசியும் .!


சுயமரியாதை சுடரொளி கே .கே.சின்னராஜ் 
                           தன்னுடைய தந்தை சுயமரியாதை சுடரொளி கே.கே.சின்னராஜ் அவர்களை நினைவுப்படுத்தும் விதமாக சிற்றரசன் என்றும் ,தங்கள் வாழ்வியலில் இளவரசியாய் வந்து உதித்தவள் என்பதால் மங்கையர்க்கரசி என பெயரிட்டு மகிழ்ந்தனர் .அன்பாலும் பண்பாலும் பழகும் தன்மையாலும் ஊரார் போற்றும் வண்ணம் வளர்ந்து நிற்கின்றனர் . சிற்றரசன் பொறியாளராய் ,தனித்து சிறப்பான தொழில் நடத்துபவராக உயர்ந்து விளங்குகிறார். மங்கையர்க்கரசி மருத்துவம் படித்து கொண்டிருக்கிறார் .கொள்கை உணர்வில் எவருக்கும் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்கிற அளவிற்கு இருவரும் தங்களின் தாத்தா ,தந்தை ,ஏந்திய கொடியினை இன்னும் உயரமாய் ஏந்தி பிடித்துள்ளனர்
வண்ண திரை சீலையில் மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட மேடை 
                                   நெருங்கிய நண்பர்கள் ,உறவினர்கள்,கழகத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் ,என தங்கள் 25 ஆண்டுகால வாழ்வியலுக்கு பெரும் துணையாக இருந்தவர்களை தேர்ந்தெடுத்து தங்கள் பெற்றோர்களின் மணநாள் விழாவை கே.சி .எழிலரசன்- அகிலா ஆகியோர்களின் செல்வர்கள் பொறியாளர் எ.சிற்றரசுவும் ,மருத்துவர் மங்கையர்க்கரசியும் விழாவிற்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஏலகிரி மலையில் 1௦ ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த இந்துஸ் ஸ்கூல் ஆப் லீடர்ஷிப்  வளாகத்தில் இயற்கை எழில் சூழ்ந்த திறந்தவெளி அரங்கில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Amphitheatre இருக்கை அமைப்பு முறையில் பார்வையாளர் வரிசை அமைக்கப்பட்டிருந்தது .தரை தளத்தில் வண்ணமயமான திரை சீலைகளை கொண்டு பல்வேறு மலர்களை கொண்டு சிறப்பு விருந்தினருக்கான இருக்கை அமைக்கப்பட்டிருந்தது .மையத்தில் ‘’மணநாள் மகிழ்ச்சி விழா ‘’ என எழுத்துக்களோடு அகிலாவும் எழிலரசனும் பதாகையில் சிரித்து கொண்டிருந்தார்கள்,      

மழலை........... மங்கையாய்.........





வளாகத்தில் நுழைகிற ஒவ்வொருவரையும் இளநீர் அளித்து வரவேற்று கொண்டிருந்தனர் சிற்றரசனும் மங்கையர்கரசியும் .ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மங்கையர்க்கரசி பார்த்ததும் எனக்கு அடையாளம் தெரியவில்லை .பெரியார் பிறந்த நாள் விழாவில் முழக்கமிட்டு வந்த குழந்தை இன்றைக்கு மங்கையாகவே வளர்ந்து நிற்பதை கண்டு காலம் எத்தனை வேகமாய் ஓடிக்கொண்டு இருக்கிறது என்பதை உணர்ந்தேன்  

எழிலரசன் எப்போதும் புதுமை விரும்பி .எந்த ஒரு செயலையும்  நேர்த்தியாகவும் ,திட்டமிட்டும் செய்யக்கூடியவர் .இன்றல்ல 25 ஆண்டுகளுக்கு முன்பு தன் தந்தையின் நினைவை கூட தமிழ் விழாவாக செய்தவர் .இன்றைக்கு தனது மணவிழாவையும் புதுமையான முறையில் உறவினர் ,நண்பர்கள்,இயக்க தோழர்களுடன் கொண்டாடுகிறார் .இந்த நிகழ்விற்கு மிகப் பொருத்தமாக பாவலர் அறிவுமதி ‘’மணமகிழ்ச்சி நாள் ‘விழா’’ என பெயர் சூட்டி இருந்தார்


                    வண்ணமயமான பார்வையாளர் வரிசை
திறந்தவெளி அரங்கில் இதமான இளங்காலை வெயில் , இளையராஜாவின் இசை மனதை வருடி கொண்டிருந்தது தூய நெஞ்சக் கல்லூரியின் கூடுதல் முதல்வர் அருட்தந்தை பிரவீண் பீட்டர் கையில் ஒலிபெருக்கி வைத்துக் கொண்டு நிகழ்ச்சிகளை திட்டமிட்டு கொண்டிருந்தார் அரங்கம் வெள்ளிவிழா காணும் மணமக்களுக்காக காத்திருந்தது. நெருங்கிய நண்பர்கள் ,உறவினர்கள்,கழகத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் ,என தங்கள் 25 ஆண்டுகால வாழ்வியலுக்கு பெரும் துணையாக இருந்தவர்களை தேர்ந்தெடுத்து அழைக்கப்பட்டிருந்ததால் 1௦௦ அல்லது 15௦ பேர் இருக்கலாம் .திராவிடர் கழகத் தோழர்கள் கருப்பு உடையிலும் கிருஸ்துவ கன்னியாஸ்திரிகள் அவர்களின் அங்கியிலும், கதர் சட்டைகள் ,நவநாகரீக உடைகள் என வண்ண கோலத்தை வாரி இறைத்தது போல் இருந்தது பார்வையாளர் வரிசை .
விழா நாயகரை  முன்னே போகச்சொல்கிறார் தமிழர் தலைவர் 
                             25 ஆண்டுகளுக்கு முன்னால் கருப்பு கோட் சட்டையுடன் மணவிழாவை கொண்டாடிய எழிலரசன் வெள்ளை பட்டு சட்டை வேட்டியுடன் வந்திறங்கினார் .இயக்கத்தின் தலைவர் என்பது மட்டும் அல்ல குடும்பத்தின் தலைவருமான தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னே நடந்து வர அவர் பின்னால் வெள்ளி விழா மணமக்கள் வந்தனர் .ஆசிரியரும் மணமக்களும் வருகிறார்கள், உரத்த கரவொலியில் அவர்களை வரவேற்போம் என்று அருட்தந்தை பிரவீண் பீட்டர் அறிவித்தார் ,தமிழர் தலைவர் ஆசிரியர் பின்னே திரும்பி இன்றைக்கு நீங்க தான் விழா நாயகர்கள் நீங்கள் முன்னே செல்லுங்கள் என்று ஆசிரியர் வழிவிட கரவொலி இன்னும் கூடுதலாய் உற்சாகத்துடன் ஒலித்தது
முன்னிலை வகித்த உறவுகளும் தோழமையும் நட்பும்  
                                      இந்த மணமகிழ்ச்சி நாள் விழாவிற்கு ஆசிரியர் தலைமை தாங்குவார் .எழிலரசன் வாழ்வில் மிக முக்கியமான மூன்று பேர் முன்னிலை வகிப்பார்கள் என்று சொல்லி வேலூர் மாவட்ட மதிமுக செயலாளர் வ.கண்ணதாசன் ,இலண்டன் வாழ் தமிழரும் எழிலரசனின் நேசமிகு மைத்துனருமான சுசீலன் ,காமராஜ் நூற்றாண்டு விழா அறக்கட்டளையின் தலைவர் பா.கணேஷ் மல் ஆகியோர்களை முன்னிலை வகிக்க அழைத்தார் அருட்தந்தை பிரவீண் பீட்டர்.
தலைவனுக்கும் தந்தைக்கும் நம்பிக்கையாய் ''செல்லா'' 
                                     ‘’செல்லா ‘’ என செல்லமாய் அங்கு இருந்தவர்களால் அழைக்கப்பட்ட தந்தைக்கு ஏற்ற பொறுப்பான தனையனாய் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார் பொறியாளர் சிற்றரசன்.
எழிலரசனின் மனம் திறந்த  உரை 
                                       விழா முன்னுரையாற்ற வந்த எழிலரசன் இந்த நிகழ்வை நடத்தலாமா வேண்டாமா யோசனையில் இருந்த போது நடத்திவிடலாம் என நிகழ்வை நண்பர்கள் வடிவமைத்தனர் விழாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அருட்தந்தை பிரவீண் பீட்டர் செய்துள்ளார் .என்று கூறி எனது வாழ்விணையர் அகிலா குறித்து பொதுமேடைகளில் நான் பாராட்டி பேசியதே இல்லை எனக்கு கட்டுப்பட மறுக்கிறார் என்று தான் பொதுவாக கூறுவதுண்டு .உண்மையில் அகிலாவை மனந்திறந்து பாராட்டும் வாய்ப்பாக இந்த நாளை நான் அமைத்து கொள்கிறேன் . இன்றைக்கு என்னுடைய தந்தை இந்த விழாவில் இல்லையே என்று ஆதங்கப்படுகிறேன் .என்னுடைய நன்றிகளை முதலில் இரண்டு காரணங்களுக்காக அவருக்கு தெரிவித்து கொள்கிறேன் முதலாவது தந்தை பெரியாரை அறிமுகப்படுத்தி இந்த கொள்கை தடத்தில் என்னை உருவாக்கியது இரண்டாவது அகிலாவை எனது வாழ்விணையர் தேர்ந்தெடுத்தது என்று தனது தந்தைக்கு முதலில் நன்றி தெரிவித்தார்
                                       

இன்ப அதிர்ச்சியை தந்த தங்கை .........
காண்போரை நெகிழச் செய்யும் காணொளி 

இந்த நாளில் நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இன்ப அதிர்ச்சியாய் இந்த நாளின் இனிய பரிசாய் வந்த அன்புத்தங்கை தன்மானத்தின் வரவு. எனது அன்பும் மகிழ்ச்சியும் பங்குபோடும் இரண்டு பேர் உண்டென்றால் ஒருவர் அன்பு மகள் மங்கை மற்றொருவர் அன்பு தங்கை தன்மானம் . நேற்று இரவு ஆசிரியர் அவர்களின் வரவுக்காக காத்திருந்த போது திடீர் என என் கண் முன்னே தங்கையை நிறுத்தினார் மைத்துனர் சுசீலன். .சற்றும் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி அது.இந்த நிகழ்வில் பங்கேற்க இலண்டனில் இருந்து வந்திருக்கிறார் தன்மானம் .இந்த ஆனந்தத்தை உருவாக்கி கொடுத்த சுசீலனுக்கு நன்றி தெரிவித்து உணர்ச்சிவயப்பட்டார் எழிலரசன் .மேலும் தனது மணவிழா நிச்சயிக்கப்பட்டமுறை குறித்தும் தமிழர்தலைவர் தலைமையில் , அவரது வழிகாட்டலில் மணவிழா நடைபெற்றதையும் நகைச்சுவையுடன் குறிப்பிட்டு தனது தந்தை சுயமரியாதை சுடரொளி கே.கே.சின்னராஜ் அவர்களால் அடையாளம் காட்டிய தலைமையின் கீழ் தந்தை பெரியார் கொள்கை வழியில் தானும்,தமது குடும்பமும் என்றும் பயணிக்கும் என்றும் தமது பிள்ளைகள் தந்தை வழியிலேயே தொழிலில் உயர்ந்து ,கொள்கை வழியிலும் சிறந்து வளர்வதை கண்டு பெருமைபடுவதாகக் கூறினார் .

முரண்பாடுகளை முறியடித்த நட்பு  ''தலைவர் '' கணேஷ் மல் 
                             எல்லோராலும் “தலைவர் ‘’ என்றழைக்கப்படுபவர் திருப்பத்தூர் காமராஜர் நூற்றாண்டு விழா நினைவு அறக்கட்டளையின் தலைவர் பா.கணேஷ் மல் .எழிலரசன் குடும்பத்தினருக்கு மிக மிக நெருக்கமானவர் .எழிலரசன் கனேஷ்மல் இடையே முகிழ்த்த நட்பு முரண்பாடுகளில் முகிழ்த்தது .அடிப்படையில் ஜெயின் சமுகத்தை சார்ந்தவர் இவரோ தமிழ் ,தமிழினம் என்று செயல்படுபவர் .அவர் கதர்சட்டைகாரர் இவர் கருப்பு சட்டைக்காரர் ,உணவில் கூட மாறுபடுகிறவர்கள் அவர் மரக்கறி உணவு உண்பவர் இவர் புலால் உணவு பிரியர் .முன்னிலை வகித்து உரையாற்ற அழைக்கப்பட்ட தலைவர் பா.கணேஷ் மல் அவர்கள் ரோட்டரியில் தலைவர் பொறுப்பு ஏற்கும்போது முரண்பாட்டில் தொடங்கிய நட்பு இது. ரோட்டரி சங்க பணிகளில் தாம் தலைவராக இருந்த ஆற்றிய பணிகள் திருப்பத்தூர் ரோட்டரி வரலாற்றின் பொற்காலமாக இருந்தது அதற்க்கு அடிப்படையான காரணம் என்னுடைய பணிகளை நண்பர் எழிலரசன் அவர்களும் தோழர் புரட்சி அவர்களும் எடுத்துக்கொண்டு செயல்பட்டதுதான் .இந்த நட்பு மேலும் மேலும் உறுதியானதற்கு காரணம் அகிலாவின் அணுகுமுறை தான் என்று குறிப்பிட்டு உரையாற்றினார்

தோழமையின் சின்னம் கண்ணதாசன்
                                       எழிலரசனின் இளம்பருவம் தொட்டு தோள் கொடுக்கும் தோழன் ,நெருக்கமான நட்பின் அடையாளமாய் இருப்பவர் ,வேலூர் மாவட்ட மதிமுக மாவட்ட செயலாளர் வ.கண்ணதாசன் அவர்கள் . அவர் முன்னிலை வகித்து உரையாற்றும் போது திராவிடர் கழகத்தில் பெரியார் சமுக காப்பணி உருவாக்கிய போது அதில் முதல் அணியாக நானும், எழிலரசனும், மாணவர் நகலகம் சவுரி அவர்களும் பயிற்சி எடுத்தோம் .அதன் பின்னர் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக வடபுலத்தலைவர்களை எல்லாம் அழைத்து வந்து தமிழகமே திரும்பி பார்க்கும் வண்ணம் தமிழர் இன எழுச்சி மாநாட்டை திருப்பத்தூரில் நடத்தினோம் என்று எழிலரசனோடு தமக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களை பகிர்ந்தார்

சுசீலன்- தன்மானம் வாழ்விணையர்கள்
இலண்டன் வாழ் தமிழர் சுசீலன் தமது முன்னிலை உரையில் பிடித்த தங்கையின் கணவனாய் இருக்க எந்த அளவிற்கு சகிப்புத்தன்மை வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? என நகைச்சுவையுடன் குறிப்பிட்டு ஒரு மைத்துனராய் நான் எழிலரசனை சகித்து கொண்டிருக்கிறேன் ,ஒரு தோழனாய், நண்பனாய் எழிலரசனின் நட்பை பெரிதும் மதிக்கிறேன் .அவரின் மனிதநேய பணிகளை போற்றுகிறேன் என்று உரையாற்றினார்

நெஞ்சங்களில் இருந்து நீங்கா  அருட்தந்தை P.M.தாமஸ் அடிகளார்  
                     முன்னிலை வகித்த பெருமக்கள் உரையாற்றி நிறைவு செய்த வேளையில் அனைவருக்கும் எலுமிச்சை பழச்சாறு வழங்கப்பட்டது .அதன் பின் ஒவ்வொருவராக வாழ்த்துரைக்கவும், அகிலா எழிலரசனுடனான அனுபவங்களையும் பேச அழைக்கப்பட்டனர் . தூய நெஞ்சக் கல்லூரியின் அருட்தந்தை அந்தோணி அவர்கள் உரையாற்றிய போது தூய நெஞ்சக் கல்லூரியின் அருட்தந்தை P.M.தாமஸ்  அவர்களை தங்களின் பெற்றோர் போல் பாதுகாத்து 13 ஆண்டுகள் அவருக்கு மூன்று வேலை உணவை தந்து சலிக்காமல் அவரை பேணியதை குறிப்பிட்டார் .
ரோட்டரியில் தொடங்கி கழகம் வரை இணைந்த தோழர் ஒளிவண்ணன் 
                                       பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவரும் ரோட்டரி சங்கத்தின் மேனாள் ஆளுநருமான கோ.ஒளிவண்ணன் அவர்கள் உரையாற்றியபோது இந்த ஆண்டு தங்களுடைய மணநாள் விழாவை நண்பர்களை அழைத்து கொண்டாடலாம் என்று தனுடைய துணைவியார் நளினி சொன்னபோது எதற்கு ஆடம்பரம் கொள்கை ரீதியாக சரி வராது என்று சொன்ன நேரத்தில் தான் நண்பர் எழிலரசனின் இந்த விழாவிற்கான அழைப்பு கிடைத்தது .எங்கள் வாழ்விலும் இப்படியொரு விழா நடைபெற எழிலரசன் முன்னுதாரணமாகி விட்டார் .எனக்கும் எழிலரசனுக்குமான அறிமுகம் ரோட்டரி சங்கத்தில் தான் ஏற்பட்டது .பின்னாளில் பெரியார் திடலில் சந்தித்தபோது நீங்க என்னங்க இங்க ? என்று இருவரும் கேட்டுக் கொண்டோம் .பகுத்தறிவாளர் கழகத் தலைவராக இருந்த எமரால்ட் கோபாலகிருஷ்ணன் மகன் தான் நான் என்ற பிறகு கொள்கை உணர்வு எங்கள் நட்பை இன்னும் பலப்படுத்தியது ரோட்டரி ,திராவிடர் கழகம் உள்ளிட்ட மனிதநேய பணிகளில் இந்த வாழ்விணையர்கள் பலருக்கும் முன்னுதாரணமாக உள்ளதாக குறிப்பிட்டார்
தலைவரின் குடும்பம் சார்பில் வாழ்த்து 
                           பிரபல வழக்கறிஞர் எஸ்.எஸ். மணியன் அவர்களோடு எழிலரசன் கொண்டிருக்கும் நட்பு பெரியாருக்கும் ராஜாஜிக்கும் இடையே இருந்த நட்பை போன்றது .அவர் உரையாற்றும்போது எனது இளைய தளபதி எழிலரசன் என்று விளித்து இன்றைக்கு எனது தாயாரின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது .எனது துணைவியாரும் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது .அவர்களையெல்லாம் விட்டு விட்டு வர இயலாத சூழல் என்றாலும் அகிலா எழிலரசனின் அன்பு தான் இந்த நிகழ்ச்சிக்கு என்னை வர வைத்துள்ளது .சிலரை அலுவலகத்தில் அமர வைத்து பேசுவோம் ,சிலரை வீட்டின் வரவேற்பறையில் அமர வைத்து பேசுவோம்.ஒரு சிலரை மட்டும் தான் வீட்டின் படுக்கை அறை வரை அழைத்து பேசுவோம்,அப்படி என் வீட்டின் படுக்கை அறை வரை வந்து பேசும் உரிமை படைத்தவர் நண்பர் எழிலரசன் .அவரின் கொள்கைகளில் நான் மாறுபட்டவன் என்றாலும் அவரின் மனிதநேயம் தான் என்னை அவர் பால் ஈர்த்துள்ளது என்று உரையாற்றினார்

பாராட்டு பெரும். கே   .சி .மணியம்மை ,கே.சி..கமலா அம்மாள் ,காந்திமதி அம்மாள் 
                                 
                             


சென்னை கட்டடக்கலை வல்லுநரும் ,ரோட்டரி சங்கத்தின் மேனாள் ஆளுநருமான  கீ.ஆனந்த் அவர்கள் உரையாற்றும்போது அகிலா எழிலரசன் வாழ்விணையர்களோடு நட்பு ரோட்டரி சங்கத்தின் மூலமாக ஏற்பட்டு  தொழில் ரீதியான நெருக்கம் உருவானது  என்றாலும்  அவர்களின் அன்பும் பாசமும் நெருங்கிய உறவினர் போல் மாறிவிட்டது .ஏலகிரிக்கு எப்போது வருகிறீர்கள் என கேட்டு என்னை வரவேற்பார்கள்.அதுமட்டும் அல்ல   எழிலரசன் திடீர் என்று போன் செய்து 1௦ பேர் உணவு அருந்த இன்னும் அரை மணி நேரத்தில் வருகிறோம் .உணவை தயார் செய் என்று சொல்லுவார் .அந்த அரை மணி நேரத்திற்குள் சிறப்பான உணவு தயாராகிவிடும் .இது ஏதோ ஒரு நாள் அல்ல .வாரத்தின் எல்லா நாளும் இப்படித்தான் .தமிழர்களின் விருந்தோம்பும் பண்பை இந்த இணையர்களிடம் தான் காண முடியும் என்று  என்று பெருமைப்பட உரையாற்றினார்
வாழ்வியல் சிந்தனைகளை வழங்கி பாராட்டும் மதியழகன் 
                                     தூய நெஞ்சக் கல்லூரியின் ,நிர்வாகி அருட்தந்தை ஜான்போர்ஜ் அவர்கள் உரையாற்றுகையில் அருட்தந்தை ஜார்ஜ் அவர்களை தங்களின் அன்பால் அவர் மறிவு காலம் வரை பாதுகாத்ததும் எழிலரசனின் நிழலாய் அவர் அன்புமகன் சிற்றரசன் பொறுப்போடு பணியாற்றுவதை பாராட்டி உரையாற்றினார் .
அன்புத்தங்கை  தன்மானம் (எ)சுதா சுசீலன் 
                                                             எழிலரசனின் அன்புத்தங்கை இலண்டனிலிருந்து விழாவிற்கு வந்து இன்ப அதிர்ச்சியை தந்த தன்மானம் வாழ்த்துரையாற்ற அழைக்கப்பட்டார் .தனது உரையை ஆங்கிலத்தில் தொடங்கினார் .பாவலர் அறிவுமதி தமிழில் உரையாற்ற அறிவுறுத்த தமது உரையை தமிழில் நிகழ்தினார் .தனக்கும் தன் அண்ணனுக்குமான உறவை நெஞ்சம் நெகிழ எடுத்துரைத்தார்
இந்த இனிமையான இல்லறத்திற்கு பெரிதும் காரணம் அகிலாவே ! இல்லை இல்லை எழிலரசனே! என பட்டிமன்றமான மேடை 
                                       அவரை தொடர்ந்து மகளிர்கள் ,சலேசிய சபையின் அருட்சகோதரிகள், என பலரும் உரையாற்ற அழைக்கப்பட மகளிரில் பெரும்பான்மையோர் அகிலா அவர்களை பாராட்டி உரையாற்றியும் ஆண்கள் பலரும் எழிலரசனை பாராட்டி உரையாற்றியும் விழா பட்டிமன்றம் போல் ஆனது .இந்த இனிமையான இல்லறத்திற்கு பெரிதும் காரணம் அகிலாவே ! இல்லை இல்லை எழிலரசனே ! என்பது போல் அவரவர் அகிலா எழிலரசன் வாழ்வில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களில் இருந்து சுவைப்பட உரையாற்றினர்
                எழிலரசனின்  மைத்துனர்கள் உரையாற்ற வந்தபோது ஒவ்வொருவரும் தங்கள் பெயரை சொல்லி அறிமுகப்படுத்தி கொண்டு இவையெல்லாம் எங்கள் பெயர் என்றாலும் எங்கள் எல்லோரையும் புனைப்பெயர் கொண்டுதான் எழிலரசன் அழைப்பார் .நாங்கள் எங்கள் குடும்பத்தினரோடு திரைப்படம் பார்த்ததை விட இவரோடு தான் அதிகம் பார்த்திருப்போம் .எந்த மைத்துனரையும் விடமாட்டார் எல்லோரையும் கட்டாயப்படுத்தி அழைத்து கொண்டுதான் திரையரங்கு செல்வார்.திருமணத்தில் வாழ்வில் ஏற்படும் இன்பத்துன்பங்களில் சரிபங்கு ஏற்கும் ,சம உரிமை படைத்த உற்ற நண்பராய் வாழ்வோம் என்று இதோ இந்த தலைவர் முன்னிலையில் உறுதி ஏற்றார் .அந்த உறுதிமொழியை இன்றைக்கும் காப்பாற்றி தங்களின் தங்கையை எல்லோரும் போற்றும் வண்ணம் உயர்த்தி உள்ளார் .இந்த வெள்ளிவிழா ஆண்டில் அவருக்கும் மணவிழாவை நடத்தி வைத்த தலைவருக்கும் நன்றி சொல்லுகிறோம் என்றனர்.எழிலரசனை மைத்துனராக பெற்றதற்கு பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறோம் என்றனர்

தலைவரின் பாராட்டைபெற்ற காந்திமதி அம்மையார் 
                               எழிலரசன் அவர்களின் மாமியாரும் அகிலா அவர்களின் தாயாருமான காந்திமதி அம்மையார் உரையாற்றும்போது தாங்கள் மிகுந்த கடவுள் நம்பிக்கையுள்ள குடும்பம் எனினும் மருமகனின் உயர்ந்த பண்பினால் கவர்ந்தது, எங்கள் நம்பிக்கை யின் காரணமாக அவருக்கு எந்த சங்கடமும் வருவதை விரும்பவில்லை என்றும் ஒரு வேளை மரணித்து விட்டால் மதசடங்குகள் நடத்தப்படு வதை தவிர்க்கவே உடல்கொடை செய்திருப்பதை கூறியபோது பலரின் கண்கள் பனித்தன. இங்கு தங்கள் மகள் அகிலாவை பாராட்டிய போதும், பெருமையாக கூறியபோதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் இப்படி ஒரு உயர்வான நிலையில் தங்கள் மகள் பேசப்படுவதற்கு முக்கிய காரணம் மருமகன் எழிலரசன் தான் என்றும் குறிப்பிட்டார்.
                                                 

               அருட்தந்தை பிரவீன் பீட்டர் அவர்களின் சகோதரர் பிரேம்  அவர்கள் உரையாற்றும்போது தனது மகள் ஒரு special child .அந்த குழந்தையின் கண்ணில் சிறு பிரச்சனை ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது .குழந்தையை காண வந்த எழிலரசன் குழந்தையை வாரி அணைத்து தோளில் சுமந்தபோது கண்ணில் கசிந்த இரத்தம் அவர் அணிந்திருந்த உயர்ரக சட்டையில் கசிந்தது .அய்யோ உயர்ரக சட்டையில் இரத்தக்கறை படிந்து விட்டதே என பதறினேன் .எழிலரசனோ ஒன்றும் இல்லை விடுங்கள் இந்த தேவதை தனது இரத்தத்தினால் என்னை வாழ்த்துகிறாள் ,அவளை வாழ்த்த விடுங்கள் என்று அவர் சொன்னபோது மனித நேயத்தின் முழு உருவமாய் எழிலரசன் எனக்கு தோன்றினார் என்று சொல்லி அவர் குரல் உடைந்து கண்ணீர் விட்டபோது நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலரின் கண்களிலும் கண்ணீர் திரண்டு இருப்பதை காண முடிந்தது

                   சென்னை மாணவர் நகலகத்தின் உரிமையாளர் சவுரிராசன் அவர்கள் திராவிடர் கழகத்தில் பெரியார் சமூக காப்பணி உருவாக்கிய போது அதில் முதல் அணி தோழராய் எழிலரசனோடு பங்கேற்றவர் .நீண்ட நாட்கள் தொடர்பில் இல்லாத நிலையில் இந்த நிகழ்வில் தனது துணைவியரோடு பங்கேற்று எழிலரசன் உடனான நட்பின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்

                                 கானா நாட்டின் தமிழ் சங்க துணைத்தலைவர் இரவி அவர்கள் உரையாற்றும்போது அண்மையில் வெளியான ‘’தெறி’’ திரைப்படத்தை கானா நாட்டில் காணச்சென்ற போது திரைஅரங்கில் ஏற்பட்ட குறுகிய கால நட்பு தான் இது.என்னால் எந்த வகையிலும் அவருக்கு அந்த நாட்டில் உதவ முடியாது .ஆனாலும் அவர் உங்கள் நட்பு தான் எனக்கு தேவை என்று பழகி வருகிறார் .பெங்களூரில் இருந்து புறப்பட்டது முதல் ஏலகிரி வரும் வரை புறப்பட்டு விட்டீர்களா ? எங்கே இருக்கிறீர்கள் ? என தொலைபேசியில் விசாரித்து இங்கே பழகும் விதமும் நட்பு பாராட்டும் விதம் கண்டு வியந்து இந்த மேடையில் நிற்கிறேன் என மனந்திறந்து உரையாற்றினார்
மாவட்ட செயலர் வி.ஜி.இளங்கோவின் வித்தியாசமான உரை ...
                                   தருமபுரி மண்டல திராவிடர் கழகத் தலைவர் பழ.வெங்கடாசலம் எழிலரசன் அவர்களின் திராவிடர் கழக பணிகளை சிறுவயதில் இருந்து கண்டு வியந்து வருவதாகவும் செயல்வீரர் என்கிற வார்த்தைகளுக்கு உதாரணமாக விளங்குவதாகவும் பெருமையுடன் கூறினார் அவ்வாறே பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் அண்ணா.சரவணன் மிக நெருங்கிய 5௦ பேரை மட்டுமே விழாவிற்கு அழைக்க போவதாக சொன்னபோது நிச்சயம் அந்த 5௦ பேரில் ஒருவனாய் நானும் இருப்பேன் என்று உறுதியாக நம்பினேன் .எங்கள் வாழ்க்கையின் வழிகாட்டியாக இந்த இணையர்கள் இருக்கிறார்கள் அவர்களோடு நான் கொண்டிருக்கும் நட்பு எந்த நிலையிலும் மாறது என உரையாற்றினார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வி.ஜி .இளங்கோ உரையாற்றும்போது என்னை இந்த இயக்கத்திற்கு அழைத்து வந்து பகுத்தறிவு ஊட்டியதே அண்ணனும் அண்ணியாரும் தான் என்று சொல்லி அண்ணன் தன்னை எப்படியெல்லாம் இயக்க பொறுப்பில் செயலாற்ற பயிற்சி அளித்தார் என்பதை நகைச்சுவையுடன் கூறினார்
நினைத்தேன் வந்தாய்  செல்வபாரதி 
                                               “நினைத்தேன் வந்தாய்“ பிரியமானவளே, வசீகரா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் கே.செல்வபாரதி உரையாற்றும் போது தாம் திரையுலகில் இயக்குநராய் வலம் வர பெரிதும் காரணம் நண்பர் எழிலரசன் அவர்களோடு தாம் கொண்டிருந்த நட்பு தான் காரணம். எழிலரசன் நடத்திய இனஎழுச்சி மாநாட்டில் கவிதை வாசிக்க வந்தபோதுதான் இயக்குனர் வி.சி .குகநாதன் தன்னை துணை இயக்குனராய் சேர்த்து கொண்டார் .அதன் பின்னரே இயக்குனராக மாறினேன் என்பதை சுட்டிக்காட்டி இந்த வாழ்விணையர்கள் பெரியார் கொள்கையில் ஆற்றி வரும் மனிதநேய பணிகளை யும், விருந்தோம்பும் தன்மை யும் குறிப்பிட்டு பலருக்கும் எடுத்துக்காட்டாக தங்கள் வாழ்வை அமைத்து கொண்டிருக்கிறார்கள் என்று  பாராட்டினார்

பாவலரின் பாச உரை 
                                                 பாவலர் அறிவுமதி அவர்கள் உரையாற்றும் போது சுயமரியாதைச் சுடரொளி கே.கே.சின்னராசு அவர்களோடும் இந்த குடும்பத்தினரோடும் தொடர்ந்து வரும் உறவையும் விவரித்து அண்மையில் தாம் தமிழில் எழுதிய பிறந்தநாள் பாடல் பெரும் வரவேற்பை பெற்றதை போல விரைவில் மணவிழாவிற்காகவும் ஒரு பாடல் எழுத வேண்டும் எண்ணத்தை இந்த நிகழ்ச்சி உருவாக்கி உள்ளதாகவும் கூறினார்.


               
வாழ்த்துக்களை கடிதத்தில் அனுப்பிய நெஞ்சங்கள் 
திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் .கலி.பூங்குன்றன்
, திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், ரோம் நகரில் இருக்கும் தூய நெஞ்சக் கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை மரிய அந்தோணி ராஜ் தெற்காசிய மண்டல ஒருங்கிணைப்பாளர் மரிய ஆரோக்கியம், பெரியார் ஆப்ரிக்கன் பவுன்டேசன் பொறுப்பாளர் சாலை.மாணிக்கம் அமெரிக்காவில் இருந்து என்.ஏ.அறிவரசு ஆகியோரின் வாழ்த்து கடிதங்கள் வாசித்து காட்டப்பட்டது
தந்தையின் நிலையில் இருந்து மகிழும்     தலைவர் !
                                           
வாழ்வியலை சொல்லித்தரும் வழிகாட்டி 
                 நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தமிழர் தலைவர், இந்த விழா எழிலான அகிலம் போற்றும் விழா என்பதை குறிப்பிட்டு தலைவராக மட்டுமல்ல ஒரு தந்தையின் நிலையில் இருந்து இந்த நிகழ்வில் பங்கேற்று மகிழ்வதாகவும் , எழிலரசன் கானா சென்று வணிகத்தை செய்து கொண்டிருந்த வேளையில் இயக்க கொள்கையையும் சிறப்பாக பரப்பினார் .அவர் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தேன் .தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவி கிடைக்கும் ,தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பட்டம் கிடைக்கும் .கணவன் மனைவி இருவரும் தங்களுக்குள் விட்டுக்கொடுப்பதில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் வாழ்வில் இனிமை கிடைக்கும் என்று கூறி வாழ்விணையர்கள் பின்பற்ற வேண்டிய பல்வேறு வாழ்வியல் சிந்தனைகளை வழங்கினார்.
எழிலான அகிலம் போற்றும் விழாவிற்கு ஏற்புரை 
                                           நிறைவாக அகிலா எழிலரசன் ஏற்புரை நிகழ்த்தினார் தனது ஏற்புரையில் எவ்வித கட்டாயமும் இல்லாமல் தமக்கு அளித்த சுதந்திரமும், தம் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் கொடுத்த மரியாதையே கொள்கையை நோக்கிய ஈர்ப்பை தமக்கு வழங்கியதாக கூறினார் .தனது தாய் வீட்டை விட்டு வந்த போது இனி நம் வாழ்க்கை இவரோடு தான் என்று முடிவு செய்து வந்ததாகவும் தனது தந்தை கூறிய ஒரே அறிவுரை எப்போது வேண்டுமானாலும் நம் வீட்டிற்க்கு வா ஆனால் மாப்பிளையோடு வா என்பது மட்டுமே .அவர் சிரிக்கும் போது சிரித்து ,அவர் வருத்தப்படும் போது வருத்தப்பட்டு மனநிறைவான வாழ்க்கையாக அமைத்து கொண்டேன். எப்போதும் ,எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி ,ஒரு நேர்மை, ஒரு நியாயம் எழிலரசனிடத்தில் இருக்கும் .அவர் கோபப்பட்டால் கூட அந்த கோபம் நேர்மையான கோபமாக ,நியாமான கோபமாக இருக்கும் .அதை உணர்ந்து கொண்டதால் வாழ்க்கை பயணத்தில் சிக்கல்கள் இல்லாமல் போனது. அவரின் வெளிநாட்டு பயணம் தனக்கு ஒரு தொய்வை தந்தாலும் புதிதாக தொழிலில் ஈடுபட்ட மகனின் வாழ்க்கைக்கு ஒத்துழைக்க அந்த இடைவெளியை தாம் பயன்படுத்தி கொண்டதாகவும் கூறினார் தொடர்ந்து தனது வாழ்க்கை பயணத்தில் கணவரோடும், பிள்ளைகளோடும் நண்பர்க ளோடும் ஏற்பட்ட சுவையான அனுபவங்களை விளக்கினார்
நெகிழ்ச்சி தந்த நன்றியுரை 
                                   நிறைவாக மருத்துவர் மங்கையர்க்கரசி நன்றியுரையாற்றினார்.மங்கையர்கரசியின் நன்றியுரை பலரும் எதிர்பார்க்காத வண்ணம் சிறப்பாக இருந்தது.தனது தாய்க்கு நன்றி தெரிவிக்க இந்த மேடையை பயன்படுத்தி கொள்வதாக கூறி தனது தந்தை ,தாய் ,அண்ணன் குறித்த பல செய்திகளை பகிர்த்து கொண்டபோது பலரும் நெகிழ்ச்சி அடைந்தனர்
பெரியாரியலின் வெற்றியை கொண்டாடும் வேளை....
                                       நிகழ்வில் கே.கே.சி.மணியம்மை ,கேகேசி.கமலா அம்மாள் , Rtn.தி.வி.மாதவன், ரகுநாத் , Rtn புரட்சி ,உள்ளிட்ட ஏராளமான ரோட்டரி நண்பர்களும் , மாநில அமைப்புச்செயலாளர் ஊமை ஜெயராமன்,தகடூர் .தமிழ்செல்வி ,மண்டல செயலளர் கரு.பாலன் ,நல்லாசிரியர் இந்திராகாந்தி ,வேலூர் மண்டலத் தலைவர் சடகோபன் ,மாவட்ட துணை செயலாளர் அரங்க.இரவி உள்ளிட்ட கழகத் தோழர்களும் உறவினர்களும் கலந்து கொண்டனர்
விழுதுகளை வேர்கள் பாராட்டும் நிகழ்வு 
                                                  தங்கள் பெற்றோரின் மணமகிழ்ச்சி விழாவை சிறப்புடன் நடத்திய பிள்ளைகளுக்கு மோகனா அம்மையார் பயனாடை அணிவித்து பாராட்டினார். அனைவருக்கும் மிகச் சிறப்பான உணவு பரிமாறப்பட்டது  நிகழ்ச்சி எழிலரசன் அகிலா ஆகியோரின் கொள்கை பணிகளையும், மனிதநேய பணிகளையும் உணர்த்தியது மட்டுமல்லாமல், தந்தை பெரி யாரின் வாழ்வியலை ஏற்று பெரியார் தொண்டன் பெற் றுள்ள வெற்றி சுயமரியாதை வாழ்வு ஒன்றே சுகவாழ்வு என்பதை உலகுக்கு உணர்த்தியது மட்டுமில்லாமல் நீண்ட காலம் நினைவில் இருந்து மறையாத விழாவாக நிறைவு பெற்றது  
இந்த மகிழ்வும் பூரிப்பும் என்றும் நிலைக்கட்டும் !



மணமகிழ்ச்சி நாள் விழா செய்திகள் பதிவு :பழ.பிரபு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக