![]() | |
மணவிழா மேடையில் குடும்பத்தினர் |
இரத்த உறவுகளை காட்டிலும் கொள்கை
உறவு நெருக்கமானது என்பதற்கு உதாரணமாக
செல்வங்கள் மங்கையர்க்கரசி –அமுதன்
மணவிழா சென்னையில் கடந்த ஞாயிறு அன்று இராயப்பேட்டை ஒய் .எம்.சி ஏ
மைதானத்தில் நடைபெற்றது . ஜாதி பார்த்து ,நாள்
பார்த்து ,ஜாதகம் பார்த்து நடைபெற்ற மணவிழா அல்ல அது . கொள்கையால் இணைந்த இரண்டு நண்பர்கள் உறவுகளாய்
இணைந்த கொள்கை குடும்பங்களின் இணைப்பு விழா அது !
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால்
பெரியார் இராணுவ சீருடை அணிந்து முதல் அணியாக பெரியார் சமூக காப்பணியில்
களமிறங்கிய இரண்டு இளைஞர்கள் வலம் இடம் ,
வலம் இடம் என்று பூட்ஸ் கால்கள் தேய அணிவகுப்பிபில் நடக்கும்போது ஒருவருக்கொருவர்
ஆறுதலாய் பேசி ,பழகி நண்பர்களாக மாறினர். இருவரிடத்திலும்
ஜாதி ,ஊர் ,தொழில் சார்ந்து எந்த
ஒற்றுமையும் இல்லை இருந்த ஒரே ஒற்றுமை பெரியார் !
அந்த இரு நண்பர்களில் ஒருவர்
எழிலரசன் மற்றொவர் சவுரிராசன்.இருவர் பெயரிலும் உள்ள மற்றொரு ஒற்றுமை அரசன் என்பது
. பிரிக்கப்படாத வடார்க்காடு மாவட்டத்தில் தந்தை பெரியார் அன்னை மணியம்மையார்
ஆகியோரின் முரட்டு பக்தனாக வலம் வந்தவர் கே.கே சின்னராஜ் அவர்கள் .தனது இறுதி
மூச்சு வரை தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் கட்டுபாடுமிக்க தளகர்த்தராக வாழ்ந்தவர்
.அவர் குடும்பத்தில் கொள்கை வாரிசாக திராவிட இயக்கத்திற்கு கிடைத்தவர் தான் நண்பர்
கே.சி எழிலரசன் அவர்கள் .பகுத்தறிவு ,இனநலம்
,தமிழீழம் ,ஜாதி ஒழிப்பு ,ரோட்டரி என பல்வேறு களங்களில் அவர் ஆற்றிய பணிகள் எண்ணிலடங்கா .
அதே போல் தான் சவுரிராசன்
.உலகத்தமிழர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர தமிழ் சான்றோர் பேரவையை நிறுவிய
தமிழ் வள்ளல் ஆனா ரூனா என்றழைக்கப்பட்ட தந்தை பெரியார் தமிழிசை மன்றத்தின்
பொறுப்பாளராய் இருந்த அருணாசலம் அவர்களின்
புதல்வர் .இன்றைக்கு ஆல் போல் பரந்து விரிந்த நிறுவனமாய் விளங்கும் அடையாறு மாணவர்
நகலகத்தின் உரிமையாளர் .திராவிடர் கழகத்தில் தொடங்கிய அவரின் பொதுவாழ்க்கை மதிமுக ,மக்கள்
நீதி மையம் என அரசியலில் நீட்சி பெற்றிருந்தாலும் தமிழ் ,தமிழ்
இனம் என்கிற மையத்தில் இருந்து செலாற்றி வருகிறவர்
மணமகிழ்ச்சி விழாவில் செல்வங்களை பாராட்டிய தமிழர் தலைவர் |
பெரியார் சமூக காப்பணியில் தொடங்கிய
இந்த இரண்டு நண்பர்களின் நட்பு கால ஓட்டத்தில் சற்று விடுபட்டிருந்த நிலையில்
நண்பர் எழிலரசன் -அகிலா ஆகியோரின் 25 ஆம்
ஆண்டு மணவிழாவையொட்டி நடத்தபட்ட “மணமகிழ்ச்சி விழா” மீண்டும் நெருக்கமான நட்பை
இருவருக்குள் ஏற்படுத்தி இருந்தது.பெற்றோரின் 25
ஆம் ஆண்டு மணவிழாவை பிள்ளைகள் பொறுப்புடன் நடத்திய விதமும் ,அன்பு செல்வி மங்கையர்க்கரசி ஆற்றிய நன்றிஉரையும் எவராலும் மறக்க முடியாது . நான் உணர்ந்தவரை அந்த நிகழ்வே இந்த
மணவிழாவிற்கு அடித்தளமாய் அமைந்திருக்கலாம் .
அன்புச் செல்வி மங்கையர்க்கரசியை குழந்தையாய்
மடியில் வைத்து .திராவிடர் கழக
ஊர்வலங்களில் முழக்கமிட்டு வரும்போது,
திராவிட மாணவர் கழகத்தில் மருத்துவ மாணவியாக தலைமை தாங்கிய போது என ஒவ்வொரு அங்குல
வளர்ச்சியையும் வியந்து ரசித்து
பார்த்திருக்கிறேன் . புரட்சிக்கவிஞர்
பாரதிதாசன் பெண் குழந்தை தாலாட்டில் சோலை மலரே ! சுவர்ணத்தின் வார்படமே! என்று
கூறும் கவிதையின் ஒவ்வொரு வரிக்கும் பொருத்தமானவர் மங்கையர்க்கரசி
செல்வன் அமுதன் குறித்து நான்
அதிகம் அறிந்திருக்கவில்லை என்றாலும் “மண நாள் சொல்லும் மகிழ்ச்சி விழா”வில்
விடுதலை.இராசேந்திரன் அவர்கள் அமுதனின்
தத்துவ ,அரசியல் அறிவு குறித்து கூறியபோது வியந்தேன் .ஆனா ரூனா கட்டி எழுப்பிய தொழில்
சாம்ராஜியத்தை இன்றைக்கு நிர்வாகிக்கும்
ஆளுமையை அவரது நிறுவன ஊழியர்கள் கூறியபோது ஆச்சரியமடைந்தேன்
மங்கையின் மருத்துவ மேல்
படிப்பிற்கு எவ்வித தடையும் இருக்காது .ஏற்றுக்கொண்டிருக்கும் கொள்கையிலும் எவ்வித
சமரசமும் செய்ய வேண்டியதில்லை என்பதினால் நட்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற நண்பர்கள் தங்கள் பிள்ளைகளின்
மனமொத்த சம்மதித்தினால் உறவினர்களாக மாறினர் .இந்த உறவு இணைப்பால் இந்த இரண்டு குடும்பங்களை விட அதிகம்
மகிழ்ந்தவர்கள் நட்பு வட்டத்தினரே !
![]() | |
சோலை மலரே !சுவர்ணத்தின் வார்படமே! |
இரண்டு அரசர்கள் நடத்தும் விழாவாயிற்றே அதுவும் கொள்கை அரசர்கள் .பொது
விழாக்களேயே பார்த்து பார்த்து
திட்டமிட்டு செய்பவர்கள் தங்களின் பிள்ளைகளின் விழாவென்றால் எந்த அளவிற்கு
திட்டமிட்டு செதுக்கி இருப்பார்கள் என்பதை விழாவை கண்டவர்கள் உணர்ந்திருப்பார்கள்
. இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஒரு மணவிழா மாளிகையே உருவாக்கி
இருந்தார்கள் .
அரங்கின் முகப்பில் இருபுறமும்
பெரியார் நின்றிருக்க பக்கத்தில் ஒரு பனை மரம் வைக்கப்பட்டிருந்தது .அந்த பனை
மரத்தில் அழகான இரண்டு குருவி கூடுகள் .பனைமரம் தமிழீழத்தையும் ஈழப் போராட்டத்தில்
வஞ்சிக்கப்பட்டோருக்கான அடைக்கலமாக இருந்த மாணவர் நகலகம் குருவி கூடுவாகவும்
எனக்கு தெரிந்தது அந்த பனை மரம் ஒரு குறியீடாகவே உணர்ந்தேன் .
ஆடி மாதத்தில் ஆசானின் பறையிசை
நிகழ்வுடன் மணவிழா தொடங்கியது .அரங்கம் கொள்கை இன உணர்வாளர்களால் நிரம்பி வழிய
எந்த கொள்கைக்காக தங்களின் தந்தையார் வாழ்ந்து மறைந்தார்களோ, எந்த கொள்கை இவர்களை இணைத்ததோ
அந்த கொள்கையின் தலைவர் தமிழர் தலைவர்
வீரமணி அவர்கள் தலைமையேற்று ஜாதி மறுத்து ,தாலி மறுத்து தந்தை பெரியார் சுயமரியாதை சுடரொளி கே.கே.சி ,வள்ளல் அருணாசலம் ஆகியோரின் படங்களை தாங்கிய மேடையில் மணவிழாவை நடத்தி
வைத்தார்
மணவிழாவை நடத்தி வைத்து தமிழர் தலைவர்
உரையாற்றும்போது திராவிடர் கழக பாசறையில் வளர்ந்த தோழர்களின் குடும்பங்கள் இணைந்துள்ள
நிகழ்வை பாராட்டியதுடன் அந்த குடும்பங்களுக்கும் இயக்கத்திற்குமான பிணைப்பை தனது நினைவலைகளில்
இருந்து நினைவு கூர்ந்தார். பெரியார் என்னும் நாற்றங்காளிலே விளைந்த நாற்றுக்கள் தான்
பல இயக்கங்களில் பயிராகி நிற்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டி அருமையான பகுத்தறிவு
பேருரையை நிகழ்த்தினார் .
![]() |
வருகை தந்த வைகோ அவர்களுக்கு சிறப்பு செய்யும் மணவீட்டார் |
வாழ்த்துரை வழங்கிய மறுமலர்ச்சி திமுக பொது
செயலர் வைகோ அவர்கள் மதிமுக தொடங்கிய காலத்தில் சவுரிராசன் ஆற்றிய பணிகளையும் அதே போல்
1994 ஆம் ஆண்டு கன்னியாகுமாரி முதல் சென்னை வரை நடைபெற்ற நடைபயணத்தில் தொண்டர் படையை
சவுரிராசன் வழிநடத்திய ஆற்றலையும் விவரித்து
மணமக்களை வாழ்த்தினார் .மணவிழாவில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர்
இந்த மேடை ஒரு மருத்துவ மேடை என தொடங்கி இத்தகைய மணவிழாக்களை பார்வையாளனாக இருந்து
கண்ட நான் இன்றைக்கு மணவிழா மேடையில் இருப்பதற்க்கு காரணமான சவுரிராசன் அவர்களுக்கு
நன்றி என வாழ்த்துரையாற்றினார் .
மணவிழா மகிழ்வாக எழிலரசன் –அகிலா வாழ்விணையர்களின்
குடும்பத்தின் சார்பில் “ஈ.வெ.ரா மணியம்மை பவுண்டேஷன்” நிதியாக இரண்டாவது தவணையாக ரூ 50,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்
![]() |
ஈ.வெ.ரா மணியம்மை பவுண்டேஷன்” நிதியாக இரண்டாவது தவணையாக ரூ 50,000 |
மணவிழாவில் அய்யா நல்லக்கண்ணு ,அய்யா பழ .நெடுமாறன் வி.ஐ.டி வேந்தர் விஸ்வநாதன் ,தொல்.திருமாவளவன்
, பேராசிரியர் சுபவீ , கோவை இராமகிருட்டிணன், தி.வேல்முருகன்
நடிகர் நாசர் , நடிகை
ஸ்ரீ பிரியா, தயாரிப்பாளர் தாணு,பாவலர்
அறிவுமதி ,அரசு அதிகாரிகள் ,இன உணர்வாளர்கள்
உள்ளிட்ட பல அரசியல் ,தமிழ் ,திரை ஆளுமைகளால்
அரங்கம் நிரம்பி இருந்தது. வருகை தந்த அனைவருக்கும் சிறப்பான புலால் விருந்து அளிக்கப்பட்டது
![]() | |
ஆசிரியருடன் அய்யா நல்லகண்ணு |
நிரம்பி வழிந்த அரங்கம் ,சுவையான விருந்து ,ஆடம்பரமான ஏற்பாடுகள் ,தமிழகத்தில் பெரும் அரசியல் ஆளுமைகள் என பல இருந்தாலும் மணவிழாவின்
வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் அது காரணமல்ல . அரங்கு நிறைந்த தமிழர் கூட்டம்
ஒவ்வொருவரும் அமுதனையும் மங்கையையும் தங்கள் பிள்ளைகளாகவே கருதி வாழ்த்தி
மகிழ்ந்தார்களே அது தான் மணவிழாவின் வெற்றி !அது தான் கொள்கையின் வெற்றியும் கூட
!!
மணமகிழ்ச்சிநாள் விழாவில் நன்றியுரை ஆற்றிய மங்கை |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக