செவ்வாய், 24 செப்டம்பர், 2013

திருப்பத்தூரில் திராவிடர் திருவிழா




மண் குலுங்கிட , மனங்கள் குலுங்கிட, கொள்கை மணம் பரப்பி,
திருப்பம் தந்திட்ட திருப்பத்தூர் !
இல்லை! இல்லை! திராவிடத்தில் சாதி எல்லை!
இல்லை! இல்லை! திராவிடத்தில் மத எல்லை!
இல்லை! இல்லை! திராவிடத்தில் மொழி எல்லை!
இல்லை! இல்லை! அய்யாவின் கொள்கையில், அரசியல் எல்லை!
இல்லை! இல்லை! அய்யாவின் கொள்கையில்,
ஆண் -பெண் எல்லை!
இல்லை! இல்லை! அய்யாவின் கொள்கையில்,
பூகோள எல்லை  என
எல்லை இல்லா அய்யாவின் கொள்கை,
எங்கெங்கும் ஒலித்திட்ட திருப்பத்தூர்!
யாராலும் முடியாதது,
மகளிரால் மட்டுமே முடியும்-என,
மனம் திறந்து தமிழர் தலைவர்,
மாண்புடன் மேடையில் பாராட்டும் வேளை,
மகளிர் தம் உள்ளங்கள் எங்கும்,
மகிழ்ச்சிப் பூக்கள் பூத்திட்ட சோலை !
மனிதம் பிறந்த நாளாம் ,
மாண்புறு செப்டம்பர் பதினேழிலே,
புரட்சிப் பெண்கள் பூபாளம் பாடிய,
புதுமை நிகழ்த்திட்ட திருப்பத்தூர் !
உலக எல்லையில் எங்கிருந்த போதும்,
கொள்கைக் காதலியை மறக்க முடியுமா?  என
வழி நடத்திடும்  வல்லமை வாய்ந்த
இயக்கத்தின் எழிலாம்,
அவர்தான் மாவட்டத் தலைவராம் !
விவேகமிக்க விஜி இளங்கோவன் !
ஆற்றல் மிக்க அகிலாவின் பின்னே,
இந்திராகாந்தி,கவிதா போல்,
ஆயிரம் ஆயிரம் மகளிர் கூட்டம்,
அற்புதமாய் அணி வகுத்திட,
மகளிர் நாடாய் மாறிய திருப்பத்தூர் !
மயிர் வளர்க்கவும் உரிமை அற்ற,
பார்ப்பன விதவைகள் கூட,
விழுகின்ற கொள்கை மழையில்,
விளைகின்ற உரிமை பயிர்களாய்,
விழித்துக் கொண்டதும்,விடுதலை பெற்றதும்,
அய்யாவின் கொள்கையாலே ! என முழங்கிய தமிழர் தலைவர் !
அவர், எழில் அரசரைப் பாராட்டினால்,
எல்லோரையும் பாராட்டியதாய்,
அகிலாவை பாராட்டினால்,
அனைவரையும் பாராட்டியதாய்,
ஏற்றுக் கொள்ளும் இயக்கச் சுற்றம் !
திருப்பத்தூர் ! ஓர் கொள்கை முற்றம் !
இதுவே திருப்பத்தூர் வரலாறு !  இதனை
போற்றுவோம் ! பின் பற்றுவோம் !

வியாழன், 19 செப்டம்பர், 2013

திருவிழாபுத்தூர் ஆனது திருப்பத்தூர் தமிழர் தலைவர் புகழாரம் !

திருப்பத்தூரில் தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
தமிழகத்திற்கே வழிகாட்டும் திருப்பத்தூர் மகளிர் அணியினர்
தமிழர் தலைவர் பங்கேற்று பாராட்டு
மாநில மகளிர் பாசறை பொருளாளர் அகிலா எழிலரசன், கவிதா, இந்திராகாந்தி ஆகியோர்க்கு பாராட்டு
திருப்பத்தூர், செப். 18- திருப்பத்தூரில் 17.9.2013 அன்று தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்க வந்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை காஞ்சிபுரம் எல்லையில் மாவட்டத் தலைவர் டி.ஏ.ஜி.அசோகன் தலைமையில் கழகத் தோழர்கள் கொள்கை முழக்கத்தோடு கழகக் கொடி யேந்தி வரவேற்று பயனாடைகள் அணிவித்தனர்.
ஜோலார்பேட்டையில் வரவேற்பு
ஜோலார்பேட்டைக்கு மாலை 5.40 மணிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாநில மகளிர் பாசறை பொருளாளர் அகிலா எழிலரசன் தலைமையில் ஏராளமான மகளிர் மற்றும் தோழர்கள் திரண்டிருந்து பலத்த ஒலி முழக்கத்தோடு பயனாடை அணிவித்து வரவேற்றனர். கழகத் தோழர்கள் புடைசூழ தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கிருந்து 20க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் தந்தை பெரியார் உருவம் பொறித்த பதாகைகள் மற்றும் கொடிகள் கட்டப்பட்டு தமிழர் தலைவர் வாகனத்தின் முன்னதாக அணிவகுத்து சென்றனர்.  மேலும் இரு சக்கர வாகனங்கள், வேன்கள், கார்கள் ஆகியவற்றில் கழகக் கொடி கட்டப்பட்டு அணிவகுத்து செல்ல தமிழர் தலைவர் வாகனம் குறைந்த தூரமே உள்ள திருப்பத்தூர் செல்வதற்கு சில மணி நேரம் ஆனது.
அய்யா - அண்ணா சிலைக்கு மாலை

அறிஞர் அண்ணா சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை...
திருப்பத்தூர் வருகை தந்த தமிழர் தலைவருக்கு வி.பி.சிங் திருமண அரங்கின் வாயிலில் தந்தை பெரியார் சிலை அருகே திராவிடர் கழக தோழர்கள் ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் ஏராளமானோர் திரண்டிருந்து தமிழர் தலைவருக்கு பயனாடைகள் அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

தந்தை பெரியார் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை...
அங்கே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை, பேரறிஞர் அண்ணா சிலை ஆகியவற்றிற்கு தமிழர் தலைவர் தோழர்கள் புடைசூழ சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தோழர்கள் புடைசூழ சென்று தமிழர் தலைவர் மரியாதை செலுத்தினார்.
அய்யா விழா
தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெறும் லலிதா மகாலுக்கு வருகை தந்த தமிழர் தலைவரை கழகக் கொள்கை முழக்கத்தோடு கழகத் தோழர்கள் மேடைக்கு அழைத்துச் சென்றனர். அனைவரையும் வரவேற்று மாவட்டச் செயலாளர் வி.ஜி.இளங்கோவன் உரையாற்றினார்.
விழாவிற்கு முன்னிலை வகித்த மண்டல செயலாளர் பழ.வெங்கடாசலம், மா. கவிதா, மு.இந்திரா காந்தி, விஜயா கேலக்ஸி மதி ஆகியோரது உரைக்குப் பின்னர் விழாவிற்கு தலை மையேற்கும் மாநில மக ளிர் பாசறை பொருளா ளர் அகிலா எழிலரசன் உரையாற்றினார்.
அரசு மருத்துவமனைக்கு ஸ்ட்ரெச்சர்

அரசு மருத்துவமனைக்கு உதவி
திருப்பத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நோயாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ஸ்ட்ரெச்சர் தமிழர் தலைவர் மூலமாக மருத்துவர்களிடம் வழங்கப்பட்டது.
உதவும் உள்ளங்கள் அமைப்பிற்கு பொருள்கள்
உதவும் உள்ளங்கள் அமைப்பிற்கு உதவி...
திருப்பத்தூரில் உள்ள உதவும் உள்ளங்கள் அமைப்பில் ஏராளமான ஏழைகள், வாய்ப்பு வசதியற்றோர் உதவி பெற்று வரும் நிலையில் அந்த அமைப்பிற்கு உதவும் விதமாக மாவட்ட கழகத்தின் சார்பில் புடவை, வேட்டி, பாத்திரங்கள் தமிழர் தலைவர் மூலமாக வழங்கப்பட்டது.
பாராட்டு
சிறந்த தொண்டு செய்து வரும் உதவும் உள்ளங் கள் அமைப்பைச் சேர்ந்த ரமேஷ் அவர்களுக்கு மாநில அரசால் விருது வழங்கப்பட்டது. அவரைப் பாராட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.
திருப்பத்தூர் வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு.
ஊற்றங்கரையில் விடுதலை வாசகர் வட்டம் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. அதற்கு தொண்டாற்றி வரும் பழ.பிரபுவுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் சிறந்த பள்ளி களுக்கான விருதினைப் பெற்றமைக்காக ஆசிரியர் சித.வீரமணிக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.
பாண்டிச்சேரியில் படைப்பாளிகள் சங்கம் சார்பில் சிறந்த கவிதை நூலுக்கான விருது பெற்ற கவிஞர் நா.சுப்புலட்சுமிக்கு தமிழர் தலைவர் பய னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.
பெரியார் 1000 - மாநிலத்தில் முதல் பரிசு
பெரியார் ஆயிரம் வினா-விடை போட்டியில் பங்கேற்ற மாநில அளவில் முதலிடம் பெற்ற கல்லாவி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி மாணவி ம.அறிவு மதிக்கு முதல் பரிசுக்கான டேப் லெட்அய் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வழங்கினார். மகாலெட்சுமி, அழகரசி, ரம்யா ஆகியோருக்கு இரண்டாம் பரிசும், துர்காலெட்சுமி, சுபாஷினி, அபிநயா, மயிழரசி, சிந்தனையாளன், யுவராணி ஆகியோருக்கு மூன்றாம் பரிசையும், புவனா, தீபிகா, கீர்த்தனா, சங்கீதா, ஜெமினி, புனிதவதி, இந்துமதி, பாஸ்கரன், ராஜேஸ்வரி, இளையவேந்தன் ஆகியோருக்கு ஊக்கப் பரிசினையும் தமிழர் தலைவர் வழங்கி சிறப்பித்தார்.
விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் பி.கணேஷ்மல், கு.பரந்தாமன், மா.மதியழகன், அருணகிரி, வ.கண்ணதாசன், பூபதி, சுபாஷ் சந்திர போஸ், தொழிலதிபர் சாமி செட்டி, தா.திருப்பதி, புலவர் வேட்டராயன் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு விழாக் குழுவின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.
மகளிர்க்கு பாராட்டு
தந்தை பெரியார் விழாவினை மகளிரே மிகச் சிறப்பான வகையில் ஏற்பாடு செய்ததை பாராட்டும் விதமாக அனைவரின் சார்பில் மாநில மகளிர் பாசறை பொருளார் அகிலா எழிலரசன், கவிதா, இந்திரா காந்தி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.
ரூ.1 லட்சம் நன்கொடை
கே.ஆர்.சி.பெரியார் மெட்டல்ஸ் உரிமையாளரும், தருமபுரி விடுதலை வாசகர் வட்டத் தலைவரும், பெரியார் பெருந்தொண்டருமான கே.ஆர்.சின்னராசு கழக வளர்ச்சி நிதியாக ரூ. 1 லட்சத்தினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் ஊமை ஜெயராமன், தகடூர் தமிழ்ச்செல்வி இருந்தனர். சின்னராசு அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.
தமிழர் தலைவர் உரை
நிறைவாக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியார் மகளிருக்காக பாடுபட்டதையும் இன்றைக்கு திருப்பத்தூரில் மகளிரே தந்தை பெரியாருக்கு விழா எடுத்திருப்பது நன்றி தெரிவிக்கும் ஓர் மாபெரும் விழாவாக நடைபெறுகிறது. இதுவே முன்னுதாரனமாக கொண்டு தமிழகம் முழுவதும் பின்பற்றவேண்டும்.
மாவட்டத் தலைவர் கே.கே.சி. எழிலரசன் வெளிநாட்டிலே இருந்தபோதும் அவர்களின் நண்பர்கள் குழு மாநில மகளிர் பாசறை பொருளாளர் அகிலா, மாவட்ட செயலாளர் இளங்கோ, கவிதா, இந்திரா காந்தி மற்றும் தோழர்கள் இணைந்து மிகப் பெரிய அளவில் நடத்தியிருக்கிறார்கள். தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை பல வடிவங்களில் செய்தமைக்காக பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.
எனக்கு உற்சாகத்தினை வழங்கிய மகளிருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முழுக்க முழுக்க மகளிரிடமே விட்டுவிட்டால் குறைபாடே இருக்காது  என மேலும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். அண்ணா.சரவணன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
நிறைவாக மாவட்ட துணைச் செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் காவேரிப்பட்டினம் தியாகராசன், திராவிடமணி, கரு.பாலன், எ.சிற்றரசு, தமிழ்ச்செல்வன் மற்றும் ஏராளமான தோழர்கள் அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து பெருமளவில் பங்கேற்றனர்.
கே.ஆர்.சி. பெரியார் மெட்டல்ஸ் உரிமையாளரும், தருமபுரி பெரியார் விடுதலை வாசகர் வட்ட தலைவரும் பெரியார் பெருந்தொண்டருமான கே.ஆர்.சின்னராசு கழக வளர்ச்சி நிதியாக ரூ. 1 லட்சம் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் ஊமை ஜெயராமன் உள்ளார்.
பெரியார் 1000 வினாடி - வினா போட்டியில் பங்கேற்று வெற்றிப் பெற்றோருக்கு பரிசு.